இந்தியா

ரயில்வே இரும்பு வேலியைத் தாண்ட முயன்ற யானை உதரவிதானம் நசுங்கி பலியான பரிதாபம்

ஆர்.கிருஷ்ணகுமார்

கர்நாடகாவில் நகரஹோலே தேசியப் பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று ரயில்வேயின் உயரமான் இரும்பு வேலியைக் கடக்க முற்பட்டபோது அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

சனிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே நிர்வாகம் வனப்பகுதியிலிருந்து யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் ஊடுருவக் கூடாது என்பதற்காக இரும்பு வேலி அமைத்துள்ளது.

42 வயதான இந்த யானை வெள்ளியிரவன்று மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளையாடி விட்டு திரும்பவும் வனத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது உயரமான இரும்பு வேலியை யானை கடக்க முயன்றது, ஆனால் அதிலேயே இந்தப் பக்கமும் வர முடியாமல் அந்தப் பக்கமும் போக முடியாமல் கடுமையாகச் சிக்கியது. சிக்கலான நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் யானை வேதனையான தோல்வி தழுவியது.

தாண்டும்போது அதன் உதரவிதானம் அதன் உடல் எடையினாலேயே நசுங்கி இன்று காலை 5 மணிக்கு அதே நிலையிலேயே பரிதாபமாக பலியானது.

மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க நிர்வாகம் இந்த வேலியை 33 கிமீக்கு அமைத்தது. ஆனாலும் வேலியக் கடந்து யானைகள் வரவே செய்கின்றன. வேலி அமைக்க கர்நாடக அரசு 2015-ல் ரூ.212 கோடி ஒதுக்கியது, இந்தத் திட்டம் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.

சிலவேளைகளில் மாடுகளும் வேலிக்கம்பியின் இடைவெளியில் சிக்கித் தவிப்பதும் நடந்துள்ளது, இந்நிலையில் இந்த யானையின் பரிதாப சாவு அங்கு கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT