இந்தியா

ம.பி.யில் அமைச்சர் பதவி யாருக்கு? - கடும் போட்டியால் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி

செய்திப்பிரிவு

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றுள்ள போதிலும், அங்கு அமைச்சர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வருகிறது. முக்கிய தலைவர்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து தங்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கோரி வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று 3 நாட்கள் ஆகியுள்ள போதிலும், அமைச்சரவை குறித்து இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. கமல்நாத்தை முதல்வராக தேர்வு செய்வதற்கே கட்சித் தலைமை கடும் நெருக்கடியை சந்தித்தது. ஜோதிராதித்ய சிந்தியாவும் களத்தில் இறங்கிய நிலையில் அவரை சமாளித்து கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது.

தனது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களை தேர்வு செய்வது கமல்நாத்துக்கு சவலான பணியாக இருக்கும் எனத் தெரிகிறது. திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, சுரேஷ் பச்சோரி, அருண் யாதவ், விவேக் தாங்கே, மீனாட்சி நடராஜன், அஜய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டி போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். கட்சித் தலைமையையும், முதல்வர் கமல்நாத்தையும் கோரி வருகின்றனர்.

இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். இதுமட்டுமின்றி கமல்நாத் முதல்வராகி விட்டதால் மாநில தலைவர் பதவியையும் ஜோதிராதித்ய சி்நதியா பெற வேண்டும் என கோரி வருகின்றனர். இதன் மூலம் ஆதரவாளர்களுக்கு கட்சியிலும், அரசிலும் முக்கிய பதவியை பெற முடியும் என கூறி வருகின்றனர்.

அமைச்சர் பதவி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க முடியாமல் கமல்நாத் தவித்து வருகிறார். கமல்நாத்தை,  ஜோதிராதித்ய சிந்தியா நேற்று சந்தித்து பேசினார். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுபோலவே பல்வேறு ஜாதித் தலைவர்களும் தங்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT