ராணுவத்தின் மேற்கு படையின் கீழ் வரும் சந்திமந்திர் (ஹரியாணா) முகாமைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஒருவர், கடந்த 2016-ல் வடகிழக்கு மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டார்.
அப்போது, அவர் மீது கேப்டன் பதவியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறினார். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த அதிகாரி தன் மீதான புகாரை மறுத்தார்.
ஆனால், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354ஏ மற்றும் ராணுவ சட்டப் பிரிவு 45 ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை லெப்டினன்ட் ஜெனரல் நிலையில் உள்ள அதிகாரி தலைமையிலான ராணுவ நீதிமன்றம் விசாரித்து வந்தது.
2 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை பதவி நீக்கம் செய்யலாம் என பரிந்துரை செய்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
ராணுவ விதிமுறைகளின்படி, ராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரை தலைமை தளபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதைப் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.