தமிழகம் மட்டுமின்றி தெலங்கானாவிலும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரியும் உருவாக்கப்படுகிறது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக செங்கல்பட்டு, மதுரை தோப் பூர், செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்படும் என்று 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்காததால் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்தநிலையில், நேற்று மத்திய அமைச்சரவை கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஒப்புதல் அளித்தது.
இத்தகவலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு 7.48 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா மாநிலம் பீபி நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதரத்துறை அமைச்சர் நட்டா கூறியதாவது
‘‘தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,264 கோடி ரூபாயிலும், தெலங்கானாவில் அமையும் மருத்துவமனை ரூ. 1,028 கோடி செலவிலும் கட்டப்படுகிறது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் இயக்குநரை நியமித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
750 படுக்கையுடன் அமையும் இந்த மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரியும் ஏற்படுத்தப்படுகிறது. 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 நர்சிங் இடங்களும் இந்த மருத்துவ கல்லூரியில் ஏற்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி மொத்தம் 20 பன்னோக்கு சிறப்பு மருத்துவ துறைகளும் கொண்டதாக இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திகழும். இதன் மூலம் ஒரு மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்’’ எனக் கூறியுள்ளார்.