‘ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில் காவேரி கலாநிதி மாறனை ஏன் விசாரிக்கவில்லை?’ என்று சிபிஐ நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, நெருக்கடி கொடுத்து ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்ததாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 82 சதவீத பங்குகள் காவேரி கலாநிதி மாறனிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால், அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதா? அவரை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியல் அல்லது சாட்சியாக கூட சேர்க்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிபிஐ அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல், ‘அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நடந்துள்ள பண பரிவர்த்தனைக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால், அவரை சேர்க்கவில்லை. மேலும், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தான் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது.
நிதியமைச்சகத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே இத்தகைய பண பரிமாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே,அவரது பங்கு என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இதுகுறித்து அடுத்த விசாரணையின்போது பதிலளிக்கிறோம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.