இந்தியா

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகளை பிடிக்க 9 அம்ச திட்டம்: ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சமர்ப்பித்தார்

செய்திப்பிரிவு

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான 9 அம்ச திட்டத்தை அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி சமர்ப்பித்தார்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடுகளின் அமைப்புதான் ஜி-20 நாடுகள். இதன் வருடாந்திர உச்சி மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்களுக்கு நடைபெற்ற இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கற்றனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘சர்வதேச வர்த்தகம், சர்வதேச நிதி மற்றும் வரி நடைமுறைகள்’ என்ற தலைப்பில் 2-வது அமர்வு நடைபெற்றது. இதில், பொருளா தார குற்றவாளிகள் தொடர்பாக 9 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமர்ப்பித்தார்.

அதில், “சொந்த நாட்டில் பொரு ளாதார குற்றத்தில் ஈடுபடும் சிலர் பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று விடுகின்றனர். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இதுபோன்ற குற்றவாளி கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் விரை வாக ஒப்படைக்க வேண்டும்.

குறிப்பாக, ஒரு நாட்டின் பொருளாதார குற்றவாளிகள் பிற நாட்டில் நுழையவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தடை விதிக்க ஓர் உடன்படிக்கையை உருவாக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள ஐ.நா. உடன்படிக்கைகளை அமல்படுத்த வேண்டும். பொருளா தார குற்றம் தொடர்பான தகவல் களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் நேற்று முன்தினம் முதன்முறையாக சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்வதேச மற்றும் முத்தரப்பு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற் சிக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “ஜப்பான், அமெ ரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகளின் முதல் எழுத்தை ஒன்று சேர்த்தால் ஜெய் (JAI) என்ற சொல் வருகிறது. இதற்கு இந்தியில் வெற்றி என பொருள்” என்றார்.

இதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின் மற்றும் பிரதமர் மோடி ஆகிய 3 பேரும் தனியாக சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அதிபர் புதின் உடன் ஆலோசனை நடத்தினேன். உலக அமைதியை மேம்படுத்தவும் சீனா, ரஷ்யாவு டனான நட்புறவை வலுப்படுத்தவும் இந்த பேச்சுவார்த்தை உதவும்” என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT