நிலத்தை திரும்பப் பெற அதிகாரி லஞ்சம் கேட்டதால், குடும்பத்துடன் பிச்சை எடுத்து, லஞ்சம் கொடுக்கும் வித்தியாசமான போராட்டத்தை ஆந்திர மாநில விவசாயி தொடங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மன்யண் வெங்கடேஸ்வரலு என்கிற ராஜு. இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராஜூவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை அவரின் உறவினர்கள் பறித்துக்கொண்டுள்ளனர். அந்த நிலத்தையும், அதற்குரிய ஆவணங்களையும் மீட்டுத்தருமாறு உள்ளூர் வருவாய் துறை அதிகாரியிடும் புகார் அளித்துள்ளார்.
அந்த நிலத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தின் ஆவணங்களை ராஜுவிடம் அளிக்க வருவாய் அதிகாரி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குர்னூல் மாவட்டத்தில் உள்ள மோத்கூர் சந்தைப்பகுதியில் விவசாயி ராஜு, அவரின் மனைவி, அவரின் இருகுழந்தைகளான சுச்சி, சுஜித் ஆகியோர் கையில் பாத்திரத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கில் எழுதப்பட்ட பேனர்கள், சிறு பதாகைகளுடன் சாலையின் ஓரத்தில் ராஜூவும், அவரின்குடும்பத்தாரும் அமர்ந்துள்ளனர். தயவு செய்து எங்களுக்கு பிச்சையிடுங்கள் எங்களின் நிலத்தை திருப்பித்தர, அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கஎன்னிடம் பணம் இல்லை. தயவு செய்து பிச்சையிடுங்கள் என்று ராஜுவும், அவரின் குடும்பத்தாரும் சாலையில் செல்வோரிடம் கேட்கின்றனர்.
மேலும், ராஜூவின் குழந்தைகள் இருவரின் கழுத்தில் தொங்கும் சிறு அட்டையில், அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து நாங்கள் பிச்சைஎடுக்கிறோம் பிச்சையிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
சாலையில் பிச்சைஎடுக்கும் போராட்டம் நடத்திவரும் விவசாயி ராஜு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ என்னுடைய நிலத்தின் ஆவணங்களை வருவாய்துறை அதிகாரி ஒருவர் வைத்துக்கொண்டு தர மறுக்கிறார். நான்பலமுறை கேட்டநிலையில், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே ஆவணங்களைத் தருவேன் என்று மிரட்டுகிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆதலால், பிச்சை எடுத்து அதிகாரியின் ஊழலை வெளிப்படுத்தி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணாவிடம் கேட்டபோது அவர்கூறுகையில், “ விவசாயி ராஜு நடத்தும் போராட்டத்தில் அர்த்தமில்லை, புகாரிலும் உண்மையில்லை. வருவாய்துறையை அவமானப்படுத்தும் ராஜு மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தகராறு இருந்தால், நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம், அதிகாரிகள் மீது பழிசுமத்தக்கூடாது” எனத் தெரிவித்தார்.