இந்தியா

ரஃபேல் ஊழலுக்கு ஆதாரம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்காதது ஏன்? - காங்கிரஸூக்கு அமித் ஷா சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தவறான பிரசாரம் செய்தது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகி உள்ளது என பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:

“ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மத்திய அரசுக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான பிரச்சாரத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.

எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறினார் என்பதை ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். எந்த தகவலின் அடிப்படையில், யார் கூறியதன் பேரில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கூறினீர்கள்.

2007ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் காங்கிரஸ் அரசு காத்திருந்ததற்கு கமிஷன் தான் காரணம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரசுக்கும், அரசுக்குமாக ஏன் மேற்கொள்ளப்படவில்லை. இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரஃபேல் ஒப்பந்த நடைமுறைகளில் தவறு நடந்ததாகவோ, வணிக ஆதாயம் இருந்ததாகவோ நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். பிடிபட்ட திருடர்கள் ஒன்று கூடி காவலரையே திருடன் என்ற கூறிய கதையாக உள்ளது.

ரஃபேல் முறைகேட்டுக்கு ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். ஆதாரம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தல் கொடுத்திருக்கலாம் அல்லவா. ராகுல் காந்தி இனிமேலாவது குழந்தை தனமாக புகார் கூறுவதை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT