புலந்த்ஷெஹர் கலவரம் குறித்த விசாரணை அறிக்கையை தொடர்ந்து அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்து உத்தர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலந்த்ஷெஹரின் சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர். இதன் மீதான வழக்குகள் 70 பேர் மீது பதிவாகி உள்ளன. இதில், தேவேந்திரா, சமன் சிங், ஆஷிஷ் சவுகான் மற்றும் சதீஷ் என நால்வர் கைதாகி உள்ளனர். முதல் குற்றவாளியாக பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் பெயர் உள்ளது.
தமக்கு இந்த வழக்குகளில் எந்த சம்மந்தமும் இல்லை என தலைமறைவாக இருக்கும் யோகேஷ், ஒரு செல்பி பதிவாக்கி வெளியிட்டுள்ளார். சுபோத் வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வரும் உ.பி படைக்கு ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.
அதில், ஆய்வாளர் சுபோத்தை ஒரு நபர் சுடுவது போல் பதிவாகி உள்ளது. சுடும் இந்த நபர் விடுப்பில் தன் கிராமத்திற்கு வந்த ராணுவ வீரர் ஜீத்து என போலீஸ் நம்புகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கலவரம் தொடர்பாக போலீஸ் டிஜிபி நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட போலீஸ் எஸ்.பி. கே.பி.சிங் தவறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் லக்னோவில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநில உள்துறை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.