காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் விருப்பத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கூறியுள்ளார். இதன் மீது லக்னோவில் எழுந்த கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதைத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 16-ல் சென்னையில் நடந்த விழாவில் பேசிய ஸ்டாலின், பிரதமர் பதவிக்கு தாம் தமிழக மண்ணில் இருந்து ராகுல் முன்மொழிவதாகக் குறிப்பிட்டார். மேடையில் இருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நேற்று லக்னோவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அகிலேஷ் கூறும்போது, ''பிரதமர் பதவிக்காக ராகுல் பெயரை எவராவது(ஸ்டாலின்) எடுத்திருக்கலாம். இதற்கு அவரை எதிர்க்கட்சியினர் அனைவரும் தம் தலைவராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை'' எனப் பதிலளித்தார்.
''நம் நாட்டின் பொதுமக்கள் பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசு மீது கடும் கோபமாக உள்ளனர். இதனால் தான் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் மெகா கூட்டணிக்காக முயன்று வருகின்றனர். இந்த கூட்டணியினர் யாராவது ஒருவரின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை'' என அகிலேஷ் மேலும் தெரிவித்தார்.
ரஃபேல் மீது கருத்து
ராகுல் தமது நல்ல நண்பர் என அடிக்கடி கூறும் அகிலேஷ் அவர், ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோருவதை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ராகுலை ஏற்காத எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின் வெளியிட்ட விருப்பத்தின் மீது ஏற்கெனவே பல எதிர்க்கட்சியினர் ஏற்க மறுத்திருந்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸின் டெரீக் ஒ பிரியன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த எம்பியான பி.எம்.ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தம் தந்தையை பிரதமராக்க விரும்பும் அகிலேஷ்
சமாஜ்வாதி சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் தன் தந்தை முலாயம் சிங் யாதவ் பிரதமராக வேண்டும் என அகிலேஷ் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தது நினைவுகூரத்தக்கது.