சபரிமலைக்குள் நுழைய முயன்ற 2 இளம் பெண்கள் இன்று அதிகாலை அப்பச்சிமேடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முன்னதாக, நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 50 வயதுக்குட்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண்கள் 11 பேர், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கினார்கள்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை அப்பச்சிமேடு வழியாக சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள் இருவரை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சபரிமலை ஐப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இதுவரை 10-ல் இருந்து 50 வயதுக்கு இடைப்பட்ட வயது கொண்ட ஒரு பெண்கூட சபரிமலைக்குள் நுழைய இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதால் அங்கு உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.