இந்தியா

புதிய தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்: 4 ஆணையர்களின் பெயர்கள் அறிவிப்பு

பிடிஐ

நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவாவையும், 4 தகவல் ஆணையர்களையும் மத்திய அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரபூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் ஆணையர்கள் குழுவில் மொத்தம் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்டச் செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் வனஜா என் சர்னா மட்டும் பெண் ஆவார்.

இதில் சின்ஹா கடந்த 1981-ம் ஆண்டு வெளியுறவு சேவை பிரிவில் தேர்வாகி, இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். வெளியுறவுத் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ள சின்ஹா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பிரிவில் இந்தியாவுக்கான கூடுதல் செயலாளராகவும் இருந்தவர்.

கடந்த 1980ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான சர்னா, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் தலைமை அதிகாரியாக இருந்தவர்.

1982-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான நீரஜ் குப்தா, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவில் செயலாளராக இருந்தவர். மத்திய சட்டச் செயலாளராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர் சந்திரா. தற்போது நியமிக்கப்பட்ட 4 தகவல் ஆணையர்களும் இந்த ஆண்டு மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT