போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு சிலர் முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய இந்தி நடிகர் நசிருதீன் ஷாவுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் அஜ்மீரில் அவர் இன்று கலந்து கொள்ள இருந்த இலக்கிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பதாக இந்தி நடிகர் நசிருதீன் ஷா விமர்சனம் செய்தார். யார் பெயரையும் குறிப்பிடாத அவர் தனது கருத்தை யுடியூப்பில் பதிவேற்றம் செய்தார். அதில் ‘‘எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏனெனில், அவர்கள் எந்த மதம் குறித்த கல்வியை பெறுவதில்லை.
நல்லது, கெட்டதும் ஒரு மதத்தினால் கிடைப்பதல்ல என நம்புவதால் அதை அவர்களுக்கு நாம் கற்பிக்க விரும்பியதில்லை. ‘நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத் தருகிறோம். நம்பிக்கை என்றால் என்ன என்பதையும் போதிக்கிறோம். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது.
இதுபோன்ற சூழல் மாற்றும் நிகழும் சூழல் தெரியாதது தனக்கு மேலும் கவலை அளிப்பதாகவும் நசீரூத்தீன்ஷா கூறியுள்ளார். நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு கோபம் வர வேண்டும். ஆனால், அச்சம் வரக்கூடாது. ‘இந்த நாடு எங்கள் வீடு. இங்கிருந்து யார் எங்களை விரட்ட முடியும்?’’ எனக் கூறி இருந்தார்.
நசிரூதீன்ஷாவின் இந்த கருத்து தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் பசுவதையை எதிர்த்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் பலியான பின்னணியில் அவரது கருத்தை சில வலதுசாரி அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன.
இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இன்று நடைபெறும் இலக்கியக் கூட்டத்தில் நசிரூதீன் ஷா கலந்து கொண்டு பேச இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக இளைஞரணி மற்றும் சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. நசிருதீன் ஷாவின் உருவ பொம்மையை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியை இலக்கிய அமைப்பு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறுகையில் ‘‘சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம். நசிரூதீன் ஷா தற்போது இங்கு வருவது அவரது பாதுகாப்புக்காக அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்’’ எனக் கூறினார்.