இந்தியா

தாய் இறந்த பின் உயிரோடு இருப்பதாகச் சான்று அளித்து ரூ.285 கோடி சொத்தை அபகரித்த மகன் கைது

பிடிஐ

தாய் இறந்த பின் அவர் உயிரோடு இருப்பதாகக் கூறி போலிச் சான்றிதழ் அளித்து ரூ.285 கோடி சொத்துகளை அபகரித்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் மனைவி, மகனை போலீஸார் கைது செய்தனர்.

மும்பை தொழிலதிபரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்தவர்கள் சுனில் குப்தா, விஜய் குப்தா. இருவரும் சகோதரர்கள். இவர்களின் தாய் கமலேஷ் ராணி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்குச் சொந்தமாக டெல்லி நொய்டாவிலும், மும்பையிலும் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை சொந்தமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கமலேஷ் ராணி மறைவுக்குப் பின், போலியாக ஆவணங்கள் தயாரித்த சுனில் குப்தா, தனது தாய் தனக்குப் பரிசாக அனைத்துச் சொத்துகளையும் தந்துவிட்டார் என்று கூறி, தனது சகோதரர் விஜய் குப்தாவிடம் இருந்து ரூ.285 கோடி சொத்துகளையும் அபகரித்துக்கொண்டார்.

ஆனால், கமலேஷ் ராணியின் விருப்பப்படி தனது மறைவுக்குப் பின் சொத்துகளை சரிபாதியாக இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தனது தாய் பரிசாக அனைத்துச் சொத்துகளையும் அளித்துவிட்டார் என்று கூறியதால் விஜய் குப்தா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நொய்டாவில் உள்ள செக்டர் 20 போலீஸ் நிலையத்தில் தனது சகோதரர் சுனில் குப்தா குடும்பத்தினர் மீது விஜய் குப்தா புகார் அளித்தார். அந்தப் புகாரையடுத்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்ததிலும், ஆதாரங்களைத் திரட்டியதிலும், சுனில் குப்தா போலியான ஆவணங்களைத் தயார் செய்து சொத்துகளை அபகரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள ஹிராநந்தினி கார்டனில் உள்ள இல்லத்தில் இருந்த சுனில் குப்தா, அவரின் மனைவி ராதா, அபிஷேக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து நொய்டா செக்டர் 20 போலீஸ் நிலைய அதிகாரி மனோஜ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

“கமலேஷ் ராணி இறக்கும் முன் தனதுசொத்துகளை தனது மகன்கள் சுனில் குப்தா, விஜய் குப்தா இருவருக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், கமலேஷ் ராணி தான் உயிரோடு இருக்கும் போதே தனக்குச் சொத்துகள் அனைத்தையும் தானமாக அளித்துவிட்டார் என்று பத்திரங்களை சுனில் குப்தா தயாரித்து வைத்துள்ளார். இது தொடர்பாக விஜய் குப்தா மாவட்ட நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர்கள் உத்தரவின் பெயரில் இந்த வழக்கு போலீஸ் நிலையம் வந்தது.

அதன்பின் மும்பை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று அவரின் சகோதரர் விஜய் குப்தா மூலம் அந்த ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்தபோது, கமலேஷ் ராணி இறந்து 7 நாட்குக்குப் பின் அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த ஆவணத்தில் நொய்டாவில் உள்ள மெழுகுவர்த்தி நிறுவனத்தைத் தானமாக சுனில் குப்தாவுக்கு அளித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பத்திரப்பதிவு விதிமுறைப்படி ஒருவர் உயிரோடு இருக்கும்போதுதான் தானம் கொடுப்பதைப் பதிவு செய்யவேண்டும்.

இந்தப் பத்திரங்களை பதிவு செய்தபோது தனது தாய் கமலேஷ் ராணி உயிரோடு இருப்பதாகப் போலியாக சான்றிதழ் அளித்து சுனில் குப்தா பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும், சுனில்குப்தாவும், அவரின் மகனும் சேர்ந்து மெழுகுவர்த்தி நிறுவனத்தில் விஜய் குப்தாவுக்கு தெரியாமல் ரூ.29 கோடி மோசடி செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தையும் விஜய் குப்தாவிடம் தெரிவிக்கவில்லை. இதைக் கண்டுபிடித்த விஜய் குப்தா, தனது சகோதரரிடம் கேட்டபோது, அவரை கூலிப்படையினர் மூலம் அடித்து, உதைத்துள்ளனர்.

இதையடுத்து, ஆவணங்கள் அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தவுடன், சுனில் குப்தா, அவரின் மனைவி, மகன் ஆகியோர் மீது மீது ஐபிசி 420, 467, 506 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடந்த 15-ம் தேதி கைது செய்தோம். அவர்கள் அனைவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் “.

இவ்வாறு போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT