பேரிடர் காலங்களில் மக்களை மீட்பது, உடனடி உதவிகளை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு (என்டிஎம்ஏ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரிடர் சமயங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிவோரை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், பேரிடர்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிறுவனம் அல்லது தனிநபர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கவுள்ளது. நேதாஜி பெயரில் அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி இந்த விருது வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dmawards.ndma.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை ஜனவரி 7-ம் தேதிக்குள் பதிவிட வேண்டும்.
மேலும், தங்கள் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட பேரிடர் குறித்த தகவல்களையும், தங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்தும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ