இந்தியா

பாஜகவுக்கு பின்னடைவு: மத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா - எதிரணியில் இணைகிறார்

செய்திப்பிரிவு

பிஹாரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பதவி விலகியுள்ளது தே.ஜ.கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் பாஜக 29, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 7 மற்றும் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி4 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், பாஜக விற்கு 22, பாஸ்வானுக்கு 6, குஷ்வா ஹாவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.

தற்போது தே.ஜ.கூட்டணியில் பிஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்து விட்டார். இதனால், அவரது ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டி இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே குறைந்த தொகுதிகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதில் குஷ்வாஹா சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவுடன் நட்பு பாராட்டி வருகிறார். மேலும் நிதிஷ் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதை எதிர்த்து வெளியேறிய சரத் யாதவுடனும் தொடர்பில் உள்ளார். எனவே, குஷ்வாஹா விரைவில் தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தநிலையில் நாடுதழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் பங்கேற்க குஷ்வாஹா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் வகித்து வரும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் நாடாளுமன்றம் நாளை கூடும் நிலையில் ஆளும் கூட்டணியின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் குஷ்வாஹா பங்கேற்க மாட்டார் என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் குஷ்வாஹா வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT