மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தொண்டர் கொல்லப்பட்டதை அறிந்து, 'இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுங்கள், பிரச்சினை வராது' என பேசிய கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்கும் முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகருமான பிரகாஷ் என்பவரை நேற்று மாலை மைசூரு சாலையில் காரின் சென்றபோது, ஒரு கும்பல் அவரை மறித்து வெட்டிக் கொலை செய்தது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் குறித்து முதல்வர் எச்.டி.குமார சாமியிடம் சிலர் செல்போனில் கொலை நடந்த சிறிது நேரத்தில் தகவல் தெரிவித்தனர். அப்போது, அவர் செல்போனில் பேசியதை ஊடகத்தினர் பதிவு செய்துள்ளனர். குமாரசாமி பேசுகையில்” பிரகாஷ் மிகவும் நல்லவர். எதற்காக அவரைக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. பிரகாஷை கொலை செய்தவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றுவிடுங்கள். பிரச்சினை ஒன்றும் வராது” என்று பேசினார்.
முதல்வர் எச்.டி. குமாரசாமியின் பேச்சு குறித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பாகியது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக, மாநிலத்தில் குமாரசாமி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று விமர்சித்தது.
பாஜக எம்.பி. சோபா கரண்ட்ராஜே கூறுகையில், “ முதல்வர் குமாரசாமியின் உத்தரவு சர்வாதிகாரித்தனம், சட்டத்துக்கு விரோதமாகச் சுட்டுத்தள்ள உத்தரவிட்டது கேமிராவில் பதிவாகியுள்ளது. வெளிப்படையாக அவர் வன்முறையைத் தூண்டுகிறார். குமாரசாமியின் இந்த சர்வாதிகாரத்தனத்தையும், அட்டூழியத்தையும் கண்டிக்கூடியதாகும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘‘ஒரு முதல்வரே வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புவர் தான் தலைவர். ஆனால் முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் இருக்கும் குமாரசாமி வன்முறை தூண்டு விடுகிறார். முதல்வர் இப்படி பேசினால் சட்டம் -ஒழுங்கு என்னாகும்? அரசு நிர்வாகத்துக்கும் போலீஸூக்கும் தவறான சமிஞ்சைகளை அவர் தருகிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.