தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் 40 பதக்கங்களையும் பல சான்றிதழ்களையும் வென்ற வளரும் விளையாட்டு வீராங்கனை தீப்தி புதுடெல்லியில் கார் விபத்தில் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதான தீப்தி தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினார். கடந்த திங்கட் கிழமை இவர் டெல்லியின் ஹாஸ் காஸ் பகுதியில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதி பரிதாபமாக பலியானார்.
காரில் வேகமாக வந்து இடித்தவர் காரை நிறுத்தாமல் சென்று பிறகு போலீசில் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீப்தி சம்பவ தினத்தன்று தான் படிக்கும் கமலா நேரு கல்லூரியிலிருந்து வீடு நோக்கி வரும்போது சாலையைக் கடந்துள்ளார். அப்போது சில்வர் நிற போலோ கார் ஒன்று வேகமாக வந்து இவர் மீது மோதிச் சாய்த்து விட்டுப் பறந்தது.
இதே சமயத்தில் தீப்தி வசிக்கும் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பங்கஜ் தீர் என்பவர் அவ்வழியே எதேச்சையாக வந்துள்ளார். அவர் வழிப்போக்கர் ஒருவர் உதவியுடன் தீப்தியை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் தீப்தி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மோதிய காரின் நம்பரைக் குறித்து வைத்திருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
பின்பு போலீஸார் விபத்தில் மரணத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபரை தேடும் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் அந்த நபரே பிற்பாடு சரணடைந்ததாகக் கூறிய போலீஸ் தரப்பினர், அவர் பெயர் நளினி அகர்வால் என்று கூறினர்.
சுல்தான்பூர் காலனியில் வசித்து வந்தார் தீப்தி, இவருக்கு 2 சகோதரர்கள் உண்டு. இவரது தந்தை உபேந்திர சாஸ்திரி, சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளியின் முதல்வராவார்.
பல்வேறு தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் 40 பதக்கங்களையும், சான்றிதழ்கள் பலவற்றையும் பெற்றவர் தீப்தி. இந்த சம்பவத்தினால் அவர்களது குடும்பத்தினர, மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.