ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் முக்கியத் தலைவருமான குமார் விஸ்வாஸ் பாஜகவில் சேருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காதமையால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
இந்தி பேராசிரியரான குமார் விஸ்வாஸின் கவிதைகள் மிகவும் பிரபலம். இதில் அரசியல் கலந்து அவர் விடுக்கும் இந்தி கவிதைகள் பலவும் யூடியூப்பிலும் வைரலாகி உள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் உபியின் அமேதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
முதல் ஆம் ஆத்மி கட்சியின் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் குமார் விஸ்வாஸ், பாஜகவில் சேருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி பாஜகவினர் கூறும்போது, ‘நாளை ரேபரேலி வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் குமார் விஸ்வாஸ் சந்தித்த பின் பாஜகவில் சேருகிறார். இவர் வரும் மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை அல்லது ரேபரேலியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுவார்.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், குமார் விஸ்வாஸ் தரப்பிலும் இந்த செய்திக்கு அதிகாரபூர்வமாக மறுப்பு வெளியாகவில்லை. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதன் முக்கியத் தலைவர்களான ஷாஜியா இல்மி, கேப்டன் கோபிநாத் உள்ளிட்ட பலரும் வெளியேறி பாஜகவில் ஏற்கெனவே இணைந்துள்ளனர்.