மேற்கு வங்கத்தில், 3 ரத யாத்திரைகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மாநிலத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் என்று மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ரத யாத்திரைகள் நடத்த பாஜக திட்டமிட்டு அதற்கான அனுமதியை மாநில அரசிடம் கோரியது. ஆனால், அனுமதி அளித்தால், மதக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை அளித்த எச்சரிக்கையைத் சுட்டிக்காட்டி, அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, அங்குள்ள 42 தொகுதிகளில் முக்கிய இடங்களில் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு இருக்கிறது.
மாநிலம் முழுவதும் 158 பொதுக்கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்கான முதல் கூட்டத்தை 'ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பிஹார் மாவட்டம், சாகர் ஐலாந்து, தராபித் ஆகிய இடங்களில் வரும் 22, 24 மற்றும் 26-ம் தேதிகளில் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரதயாத்திரையை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்கு வங்க அரசிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால், உளவுத்துறை அறிக்கையைத் சுட்டிக்காட்டி பாஜகவுக்கு அனுமதி அளிக்க முதல்வர் மம்தா அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், மாநில பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடந்த நிலையில், பாஜக தரப்பு வழக்கறிஞர்கள் 15 நிமிடமும், அரசு தரப்பில் 10 நிமிடங்களும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி தபாப்ரதா சக்கரவர்த்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது பின்வருமாறு:
அதில், பாஜக ரத யாத்திரை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது. பாஜக ரத யாத்திரை நடத்தலாம். ஆனால், எந்த மாவட்டத்தில் ரத யாத்திரை நடந்தாலும், 24 மணிநேரத்துக்கு முன்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரதயாத்திரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பாஜக நடத்தும் ரத யாத்திரை சட்டத்துக்கு உட்பட்டு, எந்தவிதமான வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ரத யாத்திரையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்தாலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் அதற்கு பாஜகவினர்தான் பொறுப்பு. ரத யாத்திரைக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்து கொடுத்து, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா இந்த தீர்ப்புக் குறித்து கூறுகையில் “ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, அதனால்தான் நீதி பெற்றோம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கொடுமைக்காரர்களின் முகத்தில் விழுந்த அறையாகும். இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று உறுதிகூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.