கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்த பின்னர் அவருக்கு அக்டோபர் 3-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மலை யாள நடிகையைத் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸாரிடம் சிக்கியதாகக் கூறப்படும் செல்போன் மெமரி கார்டில் துன்புறுத்தியதற்கான படங்களும் உள்ளன என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால் அந்தப் புகைப் படங்களைப் பார்க்கும் உரிமை எனக்கு உள்ளது. எனக்கு அதைத் தர வேண்டும்.
என்னை பொறியில் சிக்க வைப்பதற்காக இதுபோன்ற புகைப்படங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. நான் வழக்கில் சம்பந்தப்பட்டவன் என்கிற முறையில் அந்தப் புகைப்படங்களைப் பார்க்க எனக்கு உரிமை உள்ளது. எனவே அந்தப் புகைப்படங்களை எனக்குக் காட்டவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திலீப் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் ஜூனியர் ரஞ்ஜிதா ரோத்தகி ஆஜரானார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரளாவிலுள்ள மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் திலீப் கேட்பது போல அந்த புகைப்பட சாட்சியங்களை திலீப்பிடம் தர முடியாது என நீதிமன்றங்கள் நிராகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.