இப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான 2007-ம் ஆண்டு வெறுப்புப் பேச்சு வழக்கின் மனுதாரரும், சமூக ஆர்வலருமான பர்வேஸ் பர்வாஸ் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோரக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது பழிவாங்கும் அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன தற்போது. இந்த வழக்குத் தொடர்பாக 2016-ல் பாஜக தலைவர் ஒய்.டி.சிங் என்பவர் கோரக்பூர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் அதன் அடிப்படையில் கோர்ட் இன்று பர்வேஸ் பர்வாஸ் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
பர்வேஸ் பர்வாஸ் ஒரு சமூக ஆர்வலர், பத்திரிகையாளர். அதாவது இவர் யோகி ஆதித்யநாத் வெறுப்புப் பேச்சு குறித்த மோசடி செய்யப்பட்ட வீடியோவை ஆதாரமாக சமர்ப்பித்ததாக எஃப்.ஐ.ஆர். பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007-ல் கோரக்பூர் மதக்கலவரத்துக்கு காரணமானவர்கள் என பர்வேஸ் பர்வாஸ், யோகி ஆதித்யநாத், ஒய்.டி.சிங் மற்றும் இந்து யுவவாஹினியைச் சேர்ந்த ஓரிருவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலிருந்துதான் 2017-ல் யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆன பிறகு தன்னையும் பிறரையும் விடுவித்துக் கொண்டார்.
பின்னணி:
2017 மே மாதத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய சிஐடிக்கு ஏன் அதிகாரம் வழங்க தாமதம் செய்யப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி சாடியது.
மாநில அரசின் குற்றவியல் பிரிவின் சிஐடி ஆண்டுக்கணக்காக இந்த வழக்கில் விசாரணை நடத்தி 2015-ல் சமாஜ்வாதி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது.
ஆனால் சமாஜ்வாதி அரசு அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டது. பிறகு பாஜகவினால் படுதோல்வி அடைந்தது சமாஜ்வாதி. இதனால் புதிய முதல்வரான யோகி ஆதித்யநாத் இந்த அறிக்கையின் மீது தன் மீதே தன்னைச் சார்ந்தவர்கள் மீதே கைது உத்தரவுப் பிறப்பிக்குமாறு ஒரு நகைமுரண் சூழல் எழுந்தது.
இந்த வழக்கில் ஆதித்யநாத்துக்குச் சாதகமாக அமைந்தது டெல்லி தடயவியல் சோதனை நிலையம் இந்த வீடியோவைச் சோதித்து ஆதித்யநாத் குரல்தானா என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்று கூறியதே.
இது குறித்து தி ஒயர் ஊடகம் சமூக ஆர்வலர் பர்வேஸ் பர்வாஸ் வழக்கறிஞர் சையத் ஃபர்மான் நக்வியிடம் பேசிய போது, ஏன் யோகி ஆதித்ய்நாத் குரல் மாதிரிகளை டெல்லி சோதனை மையம் எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்டது, அதற்கு அவர் “அவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது, ஆனால் அது நடக்கவில்லை, அதுதான் இன்று யோகி ஆதித்யநாத் தரப்பினருக்கு வலுவான தடுப்புச் சக்தியாகி விட்டது” என்றார்.
மேலும் கலவரங்களைத் தூண்டுமாறு பேசியதாக ஆதித்யநாத்தே ஒரு தொலைக்காட்சி ஷோவில் ஒப்புக் கொண்டதாக வழக்கறிஞர் பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு கறாராக இருந்த சிஐடி தன் நிலைப்பாட்டிலிருந்து தவறினார், டெல்லி லேப் ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர பிற ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இப்போது அந்தர்பல்டி அடித்த விசாரணை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரிக்க எதுவும் அவசியமில்லை என்று முடிவு கட்டியது.
இந்தப் பின்னடைவுக்குப் பிறகு டிச.2017-ல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சீலிடப்பட்ட கவர் ஒன்றைப் பிரித்த போது யோகி ஆதித்யநாத் பேசியதாகக் கூறப்படும் விஷப்பேச்சு சிடி இருந்தது. ஆனால் அதனாலும் எந்தப் பயனும் இல்லாமல் போனது.
தி ஒயரிடம் பர்வேஸ் பர்வாஸ் கூறியபோது, ஆதித்யநாத்துக்கு எதிராக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறிய பிறகுதான் தனக்கு மிரட்டல்கள் வந்தன என்றார். அதாவது பொய் கிரிமினல் குற்றச்சாட்டும் இதில் உண்டு. இப்போது இவர் மீது கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது இவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் இருக்கிறார்.
பொய் வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பர்வேசுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியக் குற்றவாளி வெளியில் திரிகிறார். நிறைய சாட்சியங்கள் சொல்லப்பட்ட பாலியல் பலாத்காரச் சம்பவம் நடக்கவேயில்லை என்று கூறியுள்ளனர் என்கிறார் நக்வி.
அதாவது பெண் ஒருவரை பர்வேஸ் மீது குற்றம் சுமத்துமாறு பணித்துள்ளனர் என்றே அங்கு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வீடியோ ஆதாரம் மோசடி செய்யபப்ட்டது என்ற குற்றச்சாட்டையும் பர்வேஸ் பர்வாஸ் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இப்போது யோகி ஆதித்ய்நாத்தை எதிர்த்ததற்காக இவர் மீது இன்னொரு எஃப்.ஐ.ஆர். போட போலீஸார் காத்திருந்தனர், உத்தரவும் வந்து விட்டது. இது முழுக்க முழுக்க பழிவாங்கும் அரசியல் என்று அங்கு சமூக் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.