இந்தியா

2016-ம் ஆண்டின் துல்லியத் தாக்குதலை மோடி தனது அரசியல் சொத்தாக கருதுகிறார்: ராகுல் காந்தி காட்டம்

பிடிஐ

2016-ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை தனது அரசியல் சொத்தாக மோடி கருதுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜகவினர் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் அமரும் நோக்கில் பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.

உதய்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கும் போது, வங்கிகளின் வாராக் கடன் ரூ.2 லட்சம்கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது, பாஜக ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிட்ட 15 முதல் 20 தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி அளித்துள்ளது. வங்கி முறையே அவர்களை நோக்கி கவனம் செலுத்தியே நடக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மூலம் வாராக்கடன் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ம் தேதி துல்லியத் தாக்குதலை நமது ராணுவத்தினர் நடத்தினார்கள். மோடி அரசில் ஒருமுறை மட்டுமே துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால், பிரதம் மன்மோகன் சிங் ஆட்சியில் 3 முறை நடத்தப்பட்டது. அது உங்களுக்குத் தெரியுமா? துல்லியத் தாக்குதலை பிரதமர் மோடி தனது அரசியல் சொத்தாக மாற்றிவிட்டார்.

இந்த துல்லியத் தாக்குதலை மக்களிடம் வெளிப்படையாகக் கூறி, அதைத் தனது தனது சாதனையாகப் பிரகடனப்படுத்தி, உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக பயன்படுத்திக்கொண்டது. ஆனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக அரசு தவறிவிட்டது.

மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரி நடைமுறையும் பெரும் குழப்பமானவை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல். மிகப்பெரிய நிறுவனங்களுக்குக் கதவை திறந்துவிட்டது அந்த நடவடிக்கை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தைச் சிதறடித்து, சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன.

இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமான  டேட்டாக்கள், தகவல்கள் இருக்கின்றன என்பதை ஐ.டி நிறுவனங்கள் புரிந்து கொண்டுவிட்டன. தனிப்பட்ட தகவல்கள் என்பது மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர, ஒட்டுண்ணி முதலாளிகளிடம் இருக்கக்கூடாது. இதுதான் நம்முடைய நம்பிக்கையாகும்.

இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் போன்ற மருத்துவக் காப்பீடு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல மருத்துவமனைகளும், கல்வி நிலையங்களும் இல்லாமல் நாம் அரசை நிர்வகிக்க முடியாது. இந்தியாவைச் சரியான அரசு நிர்வாகம் செய்தால் அடுத்த 20 ஆண்டுகளில் சீனாவை வளர்ச்சியில் நாம் வென்றுவிடலாம். அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறது. சீனாவை இந்தியா வளர்ச்சியில் முறியடிக்கும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT