மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில், வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால், இந்த மாநிலங்களில் பாஜக வசம் தற்போதுள்ள 62 மக்களவை தொகுதிகளில் பாதி குறையும் என தெரிகிறது
நாடுதழுவிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பேசும் மக்களின் தாயகமான மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகளால் அதிர்ந்து இருந்த காங்கிரஸூக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்ற மாநிலங்கள் ஒருபுறம் இருக்க 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் தற்போது 3 மாநிலங்களிலும் சேர்த்து அக்கட்சி வசம் உள்ள 62 இடங்களில் 31 இடங்கள் குறையும் என கணிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 27 இடங்களை பாஜகவும், 2 இடங்களில் மட்டும் காங்கிரஸூம் வென்றன. ஆனால் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் பாஜக 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். காங்கிரஸ் 12 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றன. ஆனால் தற்போது பெற்றுள்ள வாக்குளின்படி பார்த்தால் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடியும்.
ராஜஸ்தானில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களை பாஜக கைபற்றியது. ஆனால் தற்போது பெற்றுள்ள வாக்குகளின்படி பார்த்தால் பாஜக 13 இடங்களை மட்டுமே கைபற்ற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெறும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான 277 இடங்களை பெற இங்கு வென்ற 62 இடங்கள் மிக முக்கியமானவை. தற்போதுள்ள நிலை நீடித்தால் 31 இடங்கள் குறையும். பாஜக பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் எழும் என தெரிகிறது.