ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை சுமார் 1 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் உதவிகளை நாடி தவித்து வருகின்றனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் காணாத இயற்கைப் பேரழிவாக கருதப்படுகிறது.
முப்படைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முழு கவனம் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தலைநகர் ஸ்ரீநகரில் 21,000 வீரர்கள், ஜம்முவில் 9,000 வீரர்கள் என மொத்தம் 30,000 ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவ உதவிகளை நாடும் மக்களுக்காக, 80 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 21,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் ஹைதராபாத், பரோடா, அமிர்தசரஸ், அம்பாலா மற்றும் டெல்லியிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றைச் ஏற்றி செல்லும் பணிகளில் 930 முறை நமது ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஈடுபட்டன.
இதன் மூலம் சுமார் 1,237 டன்கள் நிவாரணப் பொருட்கள், காஷ்மீர் மக்களுக்காக விமானப்படையின் மூலம் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை ஏற்றி வருவதற்கு படகுகள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிய வந்தவுடன், ராணுவத்தின் மூலம் 90 படகுகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர நமது ராணுவத்தால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் 19 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், மழை - வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எல்லையோர சாலைகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் அவசர நிலையில் சுமார் 5,700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவசர நிலையில் அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.