தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் நாளையோடு (டிசம்பர் 2) முடிவடைகிறது.
இதையடுத்து அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் பிடிஐ செய்தியாளருக்கு ஓ.பி.ராவத் நேற்று பேட்டி அளித்தார். அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி திரட்டுவதில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “இது ஒரு நீண்ட கால சீர்திருத்த நடவடிக்கை.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு உச்சவரம்பு இருப்பதுபோல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு வேண்டும், கட்சிகள் நிதி திரட்டுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பரிந்துரை செய்தன. வரும் காலத்தில் இது நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்.
தேர்தலில் பண பலமும் சமூக ஊடகங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை எதிர்கொள்வது குறித்து ஆராய ஒரு குழு அமைத்தோம். ஆனால் பணிச்சுமை காரணமாக குழுவின் அறிக்கையை ஆராய்ந்து சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைகள் அளிக்க முடியவில்லை. எனது பணிக் காலத்தில் இது மட்டுமே எனக்கு வருத்தமளிக்கிறது” என்றார்.