இந்தியா

பிஏசியில் தணிக்கை குழு அதிகாரி, தலைமை வழக்கறிஞரை விசாரிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

ரஃபேல் விவகாரத்தில் தணிக்கை குழு அதிகாரி மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவில் (பிஏசி) அழைத்து விசாரிக்க இருப்பதாக அதன் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார். இதற்கு அக்குழுவில் ஆளும் கட்சி மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஃபேல் விவகாரத்தில் பொய்யான தகவல்களை அளித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை தவறாக வழி நடத்திவிட்டதாக காங்கிரஸ் புகார் எழுப்பியது. இதற்கு நாடாளுமன்றத்தின் பிஏசியின் பெயரையும் மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், மத்திய தணிக்கைக் குழுவின் தலைமை அதிகாரி மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை பிஏசியின் முன் அழைத்து விசாரிக்கப் போவதாக அக்குழுவிற்கு தலைமை ஏற்றவரும் மக்களவையின் எதிர்க்கட்சித்தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார். இதற்கு பிஏசியில் உள்ள மற்ற உறுப்பினர்களில் ஆளும்கட்சி மற்றும் அவர்களைது ஆதரவு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த உறுப்பினரான பர்துஹரி மெஹ்தாப் கூறும்போது, ''ரஃபேல் மீதான தணிக்கை அறிக்கை இதுவரை பிஏசி முன் வராத போது அதன் அதிகாரிகளை அழைத்து விசாரிப்பது முறையல்ல. இவர்களை தலைவர் எனும் தனிஅந்தஸ்தில் வேண்டுமானால் கார்கே விசாரித்துக் கொள்ளலாமே தவிர குழுவின் சார்பில் அதைச் செய்ய முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

ஒடிஸாவின் ஆளும் கட்சி உறுப்பினரான பர்துஹரியை போலவே, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த உறுப்பினரான சி.எம்.ரமேஷும் கூறியுள்ளார். கார்கேவின் கருத்திற்கு சிவசேனா மற்றும் பாஜக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிஏசியின் பாஜக உறுப்பினரான அனுராக் தாக்கூர் கூறுகையில், ''தேசிய பாதுகாப்பு ரகசியங்களை கார்கே அரசியலாக்க விரும்புகிறார். இவரது செயல் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளின் மீது கேள்வி எழுப்புபது போலாகும்'' எனக் கூறி உள்ளார்.

மொத்தம் 22 பேர் கொண்ட பிஏசியின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். சிவசேனா மற்றும் அகாலி தளம் ஆகிய ஆதரவுக் கட்சிகளின் உறுப்பினர்களும் தலா ஒன்று உள்ளனர். திரிணமூல் காங்கிரஸில் இரண்டு, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிலும் தலா ஒரு எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுகவின் மக்களவைத் தலைவரான டாக்டர்.பி.வேணுகோபால் உறுப்பினராக உள்ளார்.

SCROLL FOR NEXT