இந்தியா

‘நான் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்ததும் இல்லை, அமைதியான பிரதமராக இருந்ததும் இல்லை’: மோடியை விளாசிய மன்மோகன் சிங்

ஐஏஎன்எஸ்

நான் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயப்படவும் இல்லை, அமைதியான பிரதமராகவும் இருந்தது இல்லை என்று பிரதமர் மோடியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாகச் சாடினார்.

2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்தது இல்லை. இதைச் சுட்டிக்காட்டி மன்மோகன் சிங் பேசினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “சேஞ்சிங் இந்தியா” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதன் வெளியீட்டுவிழா டெல்லியில் நேற்று இரவு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தனது புத்தகம் குறித்து மன்மோகன் சிங் பேசியதாவது:

பலர் என்னைப் பார்த்து எதிர்பாராதவிதமாகப் பிரதமராக வந்தவர் என்று கூறுகிறார்கள், நான் அரசியலுக்கே எதிர்பாராதவிதமாக வந்தவன். நான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் நிதிமைச்சராக நியமிக்கப்பட்டதே எதிர்பாராதவிதமாக நடந்ததுதான்.

நான் ஒருபோதும் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து செல்லும் பிரதமராக இருந்தது இல்லை. நான் பத்திரிகையாளர்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சந்தித்து பேட்டி கொடுத்து வந்தேன். நான் வெளிநாட்டுப் பயணம் செல்லும் போது பத்திரிகையாளர்களை உடன் அழைத்துச் சென்று இருக்கிறேன், திரும்பி வரும்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியும் அளித்திருக்கிறேன். நான் எழுதிய இந்த புத்தகத்தில் நான் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.

மக்கள் என்னை அமைதியான பிரதமர், மவுனியான பிரதமர் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னுடைய புத்தகம் அதற்கான விளக்கத்தை அளிக்கும். நான் என்னுடைய அனுபவங்களை, சாதனைகளை எல்லாம் மிகைப்படுத்தி இந்தப் புத்தகத்தில் கூறவில்லை. ஆனால் என் காலத்தில் நடந்த சம்பவத்தை அழகாக சித்தரித்துக் கூறும்.

பயிர்கடன்தள்ளுபடி

உலக அளவில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் விதமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும். இதை இந்தப் பூமியில் உள்ள ஒருவராலும் தடுக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசுகள் விவசாயிகளுக்கு பயிர்கடன் அளித்ததில் எந்தவிதமான தவறும் இல்லை. அது தவறான பொருளாதாரமும் இல்லை. ஏனென்றால், மக்களிடம் நாம் அளித்த வாக்குறுதிகளை அங்கு நிறைவேற்றி இருக்கிறோம். மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது நம்மீதான மதிப்பு உயரும். அதற்கு மதிப்பளித்து வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, மத்திய அரசு

ரிசர்வ் வங்கியின் சுதந்திரம், தன்னாட்சி ஆகியவை மதிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான உறவானது, கணவன்-மனைவி உறவு போன்றதாகும். இதில் பிரச்சினைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால், இவற்றுக்குத் தீர்வு காணப்படுவது அவசியமாகும். நாட்டிலுள்ள மிகவும் 2 முக்கிய அமைப்புகளான இவை, நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்.

நாட்டுக்கு வலுவான மற்றும் சுதந்திரமான ரிசர்வ் வங்கி அவசியமாகும். ஆதலால், கருத்து வேறுபாடுகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒன்றாக இணைந்து தீர்வு காணும் என நம்புகிறேன்.

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT