பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணி புரியும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பான அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயனின் கேள்விக்கு, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப் பதாவது:
கடந்த மார்ச் 31 வரையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகைகளில் பிஎஸ்என்எல் நிறு வனத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,206.65 கோடி. இதில் ரூ.1,053.84 கோடி பல்வேறு காரணங்களுக்காக தாவாவில் உள்ளன. ஜூன் 30 வரை ரூ. 47.21 கோடி வசூலிக்கப்பட்டுவிட்டது. மீதியை வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லாபமும், இழப்பும்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2004-05-ல் ரூ.10,183 கோடி, 2005-06-ல் ரூ.8,940 கோடி, 2006-07-ல் ரூ.7,806 கோடி, 2007-08-ல் ரூ.3,009 கோடி, 2008-09-ல் ரூ.575 கோடி லாபம் கிடைத்தது. ஆனால், 2009-10-ல் ரூ.1,823 கோடி, 2010-11-ல் ரூ.6,384 கோடி, 2011-12-ல் ரூ.8,851 கோடி இழப்பு ஏற்பட்டது. லேண்ட்லைன் தொலைபேசி எண்ணிக்கை குறைந்து செல்போன் பயன்பாடு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம். கடுமை யான போட்டி, கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு முதலீடு இல்லாதது, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்ததே இழப்புக்குக் காரணம்.
இதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அளித்துள்ள ரூ.1,411 கோடி கடனை தள்ளுபடி செய்வது, பிராட்பேண்ட் வயர் லெஸ் அலைவரிசையை திரும்ப ஒப்படைப்பதற்காக ரூ.6,724.51 கோடி நிதி உதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்ட ஊழியர்களுக்கு ஆகும் அதிக செலவினத்தை குறைத்தல், சேவையின் தரத்தை மேம்படுத் துதல், வருவாயைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களை அரசு வகுத்து வருகிறது.
இதன்படி, ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை மத்திய அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.