இந்தியா

காஷ்மீர் போர் அகதிகள் பிரச்சினையை மத்திய அரசு தீர்க்கும்: அமித் ஷா

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் போர் அகதிகள் பிரச்சினையை மத்திய அரசு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்த்து வைக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ் தானின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள எல்லையோர கிராம மக்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர்.

அப்போது பள்ளி ஒன்றில் கூடியிருந்த மக்களிடம் அமித் ஷா பேசும்போது, “1947, 1965 மற்றும் 1971 போர் அகதிகளின் பிரச்சினைகளை படிப் படியாகவும், குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளும் மத்திய அரசு தீர்த்து வைக்கும். இதற்கான நடவடிக்கை உடனே தொடங்கும் என உறுதி அளிக்கிறேன்.

பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை பாஜகவும் இந்த நாடும் உணர்ந்துள்ளன. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவி களும் செய்யப்படும். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினாலும் எங்கள் இருப்பிடத்தை விட்டுப் போகமாட்டோம் என்று உறுதியுடன் இருக்கும் உங்களின் நாட்டுப்பற்றை தலைவணங்கி மதிக்கிறேன்.

பாகிஸ்தான் அத்துமீறலை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

காஷ்மீரில் பாஜக ஆட்சி

ஆர்.எஸ்.புரா நிவாரண முகாமில் தங்கியிருக்கும் எல்லைப்பகுதி மக்களையும் அமித் ஷா சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். “பாதுகாப்பான இடங்களில் நாங்கள் வசிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று இம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அமித் ஷா கூறும்போது, “நாங்கள் வீட்டுமனை வழங்க முடியாது. மாநில அரசுதான் வழங்க முடியும். என்றாலும் மனம் தளரவேண்டாம். ஒமர் அப்துல்லா அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் அடுத்து பாஜக ஆட்சி அமைக்கும். மத்திய அரசு போல பெரும்பான்மை பெற்ற அரசாக இது இருக்கும். அப்போது உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT