இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

செய்திப்பிரிவு

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஒரே வாரத்தில் பாகிஸ்தான் இரண்டாவது முறையாக எல்லையில் அத்துமீறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லையில் நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியது. இருத்தரப்பு தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இது தொடர்பாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மனிஷ் மேத்தா கூறும்போது, " இந்திய எல்லையில் உள்ள பீமர் காலி என்ற இடத்தில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். நேற்று இரவு சரியாக 10.30 மணிக்கு சிறு ரக துப்பாக்கிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தரப்பட்டது.

இந்த தாக்குதலில் இந்திய ராணூவம் தரப்பில் சேதம் எதுவும் இல்லை ஏற்படவில்லை" என்றார்.

முன்னதாக, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட இந்திய படை வீரர் சத்யஷீல் யாதவை, விடுவிக்கவும் காஷ்மீர் எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு தரப்பு ராணுவமும் நேற்று பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT