இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும், கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடந்தது. இதில் 67 நாடுகளைச் சேர்ந்த 220 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
முன்னதாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான எம்.ஜி.ஆர். நடித்த 'மலைக்கள்ளன்' படமும், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘மாம்' திரைப்படமும் திரையிடப்பட்டது.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்', ராம் இயக்கிய 'பேரன்பு', செழியன் இயக்கிய ‘டூ லெட்', ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய 'பாரம்' ஆகிய நான்கு தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் செழியனின் ‘டூ - லெட், ராமின் 'பேரன்பு' ஆகிய படங்களுக்கு பார்வையாளர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பானாஜியில் உள்ள ஷியாம் பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் உக்ரைன் இயக்குநர் செர்கை லோழ்னிஸ்டா இயக்கிய 'டான்பாஸ்' திரைப்படம் சிறந்த படத்துக்கான தங்க மயில் விருது வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை 'ஈ.மா.வோ' படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெற்றார்.
நடுவர்களின் சிறப்பு விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூ - லெட்' தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. வாடகை வீட்டு பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கொல்கத்தா திரைப்பட விழாவின் விருது உட்பட இதுவரை 26 விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.