இந்தியா

‘‘ஜனவரி 22-ம் தேதி வரை காத்திருங்கள்’’ - சபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால், அதுவரை முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் மறுத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயி லுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் 48-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது,  இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை ஏதும் இல்லை என தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஐயப்ப தேவா சங்கம் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா ஆஜரானார் அப்போது அவர் ‘‘மண்டல பூஜை சீசன் தொடங்க இருப்பதால் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையும் முன்பாக பெண்களை அனுமதிப்பதால் பக்தர்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்.

எனவே முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். ஆனால் இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்தனர். மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தவர்கள் அதுவரை காத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT