பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 559-வது பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுள்ள இந்திய சீக்கியர்களைச் சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 549-வது பிறந்தநாள் விழா அவரின் பிறந்த இடமான கர்தார்பூரில் நடைபெறுகிறது. இந்த இடம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. கர்தார்பூரில் உள்ள குருநானக் கோயிலுக்குச் செல்ல இந்த ஆண்டு 3,700 இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் பகுதிக்கு, பஞ்சாபில் இருந்து சர்வதேச சாலை அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்து, பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், சீக்கியர்களைச் சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது பாகிஸ்தான். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித இடங்களைத் தரிசனம் செய்வதற்காக ஏராளமான இந்தியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அவர்களைச் சந்தித்து பேசுவதற்கு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிவிட்டது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக நடந்துவரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இந்தியர்களைச் சந்திக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது, கண்டிக்கத்தக்கது. இது இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகும்.
பாகிஸ்தான் அரசின் கெடுபிடிகளால், இந்தியத் தூதரக அதிகாரிகள் தங்கள் தூதரக பணிகளையும், இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய முடியாமல் நாடு திரும்ப உள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, அவர்களைச் சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்குபாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது சர்வதேச சட்ட ஒப்பந்தமான வியன்னா தூதரக உறவுகள், வியன்னா தூதரக ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
இந்தியாவின் எல்லைப்புற நேர்மை, இறையாண்மை ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிட்டு, இந்திய சீக்கியர்கள் வருகையின் போது தூதரக அதிகாரிகள் மீது வெறுப்பையும், சகிப்பின்மையையும் பாகிஸ்தான் அரசு காட்டுவது மிகுந்த கவலை அளிக்கிறது.
இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.