இந்தியா

இனிய சர்வாதிகாரி இந்திரா

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசியலில் இருந்து, என்றும் எவராலும் விலக்கி வைக்க முடியாத ஓர் அசாத்திய ஆளுமை - இந்திரா காந்தி. நேருவின் மகள் என்கிற ஒற்றை அடையாளம் மட்டுமே அவரை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து விடவில்லை. அதையும் மீறி அவரிடம் இருந்த ‘போர்க்குணம்' மிக உறுதியாக அவரின் தனிக் குணமாக மிளிர்ந்தது. அதிகாரத்தை பிரயோகப்படுத்திய ஒவ்வொரு கணத்திலும், அவரது ஒவ்வொரு முக்கிய முடிவுகளின் பின்னாலும், அவரின் தனிப்பட்ட முன்னுரிமைகள் முன் நின்றன. இதைத்தான் ‘போர்க்குணம்' என்கிறோம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கல், 1970களில் நடைபெற்ற ‘பசுமைப் புரட்சி', 1975 அவசர நிலைப் பிரகடனம், 1974-ல் பொக்ரான் அணுகுண்டுச் சோதனை, 1980களில் அவர் ஈடுபாடு காட்டிய ‘அணிசேரா இயக்கம்', 1984-ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்', எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் மேற்கொண்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள்...

இவைதான், இந்திராவின் ஆகப் பெரிய வெற்றி. 1967, 1971 பொதுத் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விஞ்சியது இது. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட தடாலடி நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய ஜனநாயகத்தை வேரறுக்கும் முயற்சியாகவும், இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்திராவை முன் நிறுத்துகிற சர்வாதிகாரப் போக்காகவும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அதே அளவுக்கு மிகையும் மிரட்சியும் இருக்கவே செய்கின்றன.

தனது ஆற்றலுக்கு மிஞ்சிய உயரம் தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்கிற எண்ணற்ற அரசியல் தலைவர்களைப் போலவேதான் இது விஷயத்தில் இந்திராவின் மனநிலையும் இருந்துள்ளது. ஜவஹர்லால் நேருவுக்கும் இந்த ‘பலவீனம்' இருக்கவே செய்தது. சீன நாட்டின் ‘எதிர்பாராத' தாக்குதல், நேருவின் ‘உயரிய' மன நிலைக்குச் சான்று. இதே வகைதான், ‘கார்கில்' ஊடுருவலும். பஞ்சசீலக் கொள்கையைத் தொடர்ந்து சீனா; லாகூர் உடன்படிக்கையை ஒட்டியே பாகிஸ்தான், இந்தியாவுக்குள் நுழைந்தது. இவற்றுக்கெல்லாம் ஏதோ ஒருவகையில் தன் மீது தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் ஒரு காரணம்.

இதனைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்திராவின் மீது வைக்கப்படும், ‘சர்வாதிகாரி' முத்திரை நியாயமற்றது என்பது தெளிவாகும். இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள் அனைத்துக்கும் அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கமே மூல காரணம்; அதனைச் சரி செய்யாமல், நிலையான பொருளாதார முன்னேற்றம் சாத்தியமே இல்லை. இதனை நன்கு உணர்ந்து, இந்தப் பிரசினைக்குத் தீர்வு காண முயன்ற ஒரே பிரதமர் இந்திரா. அவரால் மட்டுமே ‘நாம் இருவர்; நமக்கு இருவர்' என்கிற முழக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிந்தது.

இன்று பல லட்சக்கணக்கான நடுத்தர, அடித்தட்டுக் குடும்பங்கள் பொருளாதாரத்தில் சிறந்து நிற்பதற்கு வழி வகுத்தது இந்திரா முன் வைத்த ‘சிறு குடும்பம்' என்கிற கருத்துரு. அவருக்கு முன்பும், அல்லது அவருக்குப் பிந்தைய 40 ஆண்டுகளிலும் வேறு எந்தத் தலைவராலும் இப்பிரச்சினையில், இந்திராவின் ‘வேகத்துக்கு' ஈடு கொடுக்க முடியவில்லை.

தனிப்பட்ட முறையிலும், இந்திராவின் ‘ஈர்ப்பு' சக்தி, அவரிடம் இருந்த வெளிப்படையான பேச்சு, அணுகுமுறை, ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சாத' நெறிகள் மூலம் கிடைத்ததுதான். செல்வச் செழிப்பான பழக்க வழக்கங்கள் காரணமாக மாறுபட்டு இருந்தாலும், உணர்வுகளில் சராசரி இந்தியனாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டவர் இந்திரா.

அவரின் குரல் பல சமயங்களில் பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்துள்ளன. சாதி, மதம், இனம், மொழிப் பிரிவினைகளை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட அவர் ஒருபோதும் முனைந்ததே இல்லை. அந்த வகையில் இந்திரா காந்தி, உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த 'தேசியத் தலைவர்'. ஐயமே இல்லை.

இந்திராவின் ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள் இன்னமும்கூட எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் எல்லாம் கணிசமான அளவுக்கு உண்மையும் இருக்கலாம். ஆனாலும், இந்திய அரசியல், ஆட்சி முறையை, விரைந்து முன்னேற்றத்துக்கான முக்கிய ஆதாரமாக மாற்றி அமைத்து, தன்னம்பிக்கை மிகுந்த ஒரு நாடாக இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்திய சாதனை இந்திரா காந்திக்கே உரியது.

சில இனிப்புகள் சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால், உண்மை என்றும் உண்மையாக மட்டுமே இருக்க முடியும். உண்மைதானே...?

SCROLL FOR NEXT