குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த 3,800 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் அருகே சீக்கிய மதகுரு குருநானக் பிறந்த இடமான நன்கானா சாஹிப் உள்ளது. அங்கு சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் உள்ளது.
குருநானக்கின் 549-வது பிறந்தநாளை முன்னிட்டு நன்கானா சாகிப் சென்று தரிசிக்க சீக்கிய மதத்தைச் சேர்ந்த 3,800 இந்தியர்களுக்கு நவம்பர் 21 முதல் 30-ம் தேதி வரை பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது.
சமீப ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான அளவில் விசா வழங்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு புனித யாத்திரை வரும் சகோதர, சகோதரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவோம் என்றும் பாகிஸ்தான் தூதரம் தெரிவித்துள்ளது.