ராமர் கோயில் மீதான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தள்ளிப்போக காங்கிரஸ் மிரட்டல் காரணம் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு மாநிலங்கவையின் காங்கிரஸ் உறுப்பினர் கபில்சிபல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது மறுப்பில், பிரதமர் மோடி தன், ‘மன் கீ பாத்(மனதின் பேச்சு)’ நிகழ்சிக்கு பதிலாக, ‘ஜூட்டி பாத்(பொய்யான பேச்சு)’ என ஒன்றை புதிதாகத் துவங்கலாம் என கபில்சிபல் விமர்சித்துள்ளார். மன் கீ பாத்தில் பிரதமர் உண்மைக்கு முரணானவற்றை தெரிவிப்பதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் கூறும்போது, ‘கடந்த ஜனவரி 2018 முதல் நான் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கான வழக்குகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எந்த வழக்கின் விசாரிப்பையும் உச்ச நீதிமன்றத்தில் தடுத்த நிறுத்த முடியாது.
அயோத்தி வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு முதன்மையான விஷயம் அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இவருக்கு எதிராகப் புகார் கூறும் தைரியம் பிரதமருக்கு கிடையாது. அரசியல் லாபத்திற்காக காங்கிரஸை குறை கூறும் நோக்கம் நிறைவேறாது.’ எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் 200 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7-ல் நடைபெற உள்ளது. இதன் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியபோது காங்கிரஸ் மீது புகார் சுமத்தி இருந்தார்.
தனது புகாரில் அவர், அயோத்தி வழக்கு இந்த வருடம் முன்னதாக விசாரிக்கப்பட முயன்ற போது, தகுதி நீக்க நடவடிக்கையின் பேரில் உச்ச நீதிமன்ற நீதிபதி காங்கிரஸால் மிரட்டப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதை மக்களவை தேர்தலுக்கு பின் விசாரிக்க வேண்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் முயன்றதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம், 2019 மக்களவை தேர்தலுக்காக ராமர் கோயில் விவகாரம் தேசிய அரசியலில் மீண்டும் சுழலத் துவங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.