பெண் தோழி இருப்பதில் என்ன தவறு, யார் வேண்டுமானாலும் பெண் தோழி வைத்துக் கொள்ளலாம் என்று பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் பிரவீண் மாஞ்சி, பெண் போலீஸ் ஒருவருடன் கயாவில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். அதற்கான கட்டணத்தை செலுத்த பிரவீண் மாஞ்சி மறுத்ததால் ஹோட்டல் ஊழியர்கள் இருவரையும் அறையில் வைத்து பூட்டிவிட்டனர். பின்னர் போலீஸார் தலையிட்டு இருவரையும் மீட்டனர்.
சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவம் பிஹார் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. பிரவீண் மாஞ்சியை கைது செய்ய வேண்டும். முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
முதல்வர் கருத்து
இதுகுறித்து ஜிதன் ராம் மாஞ்சி பாட்னாவில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எனது மகனுக்கு பெண் தோழி இருப்பதில் என்ன தவறு, யார் வேண்டுமானாலும் பெண் தோழி நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு எதிராக பாஜக அரசியல் சதியில் ஈடுபடு கிறது என்று தெரிவித்தார். இதுகுறித்து பாஜக மாநில மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்தில், பிஹாரில் காட்டு தர்பார் ஆட்சி நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.