இந்தியா

போலீஸாருடன் கள்ளநோட்டுக் கும்பல் மோதல்: ஹைதராபாதில் காவலர் உட்பட இருவர் பலி

என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை கள்ள நோட்டு கும்பலை பிடிக்க சென்ற போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எஸ்.ஐ. க்கு கத்திக்குத்து விழுந்தது. போலீஸார் சுட்டதில் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டம், சித்திபேட்டை பகுதியை சேர்ந்த பிரபல கள்ள நோட்டு கும்பல் தலைவன் எல்லம் கவுட் தலைமையிலானோர், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் மஜீத்பூர் கூட்டு ரோடு பகுதியில் பெரும் அளவிலான கள்ள நோட்டுகளை மாற்றப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலாநகர் எஸ்.ஐ வெங்கட் ரெட்டி தலைமையில் 8 பேர் கொண்ட போலீஸ் குழு, மஜீத்பூர் கூட்டு ரோடு பகுதிக்குச் சென்றது.

அங்கிருந்த கள்ளநோட்டுக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, போலீஸார் மீது கத்தி மற்றும் துப்பாக்கியால் கள்ளநோட்டுக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக, அக்கும்பல் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதலில் காவலர் ஈஸ்வர், எஸ்.ஐ. வெங்கட் ரெட்டி ஆகியோரை கள்ள நோட்டு கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் போலீஸார் சுட்டதில், கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த முஸ்தபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த ஈஸ்வர், வெங்கட் ரெட்டி ஆகியோர் செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஈஸ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ். ஐ. வெங்கட் ரெட்டியின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கள்ளநோட்டு கும்பலை பிடிக்க ஹைதராபாத் மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அக்கும்பலை சேர்ந்த ரகு, செந்தில் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT