பிரதமர் மோடி பேசுவதில் எந்தவிதமான பொருளும் இல்லை என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், விதிஷா நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் பற்றியும், விவசாயிகள் பற்றியும், வேலையின்மை குறித்தும் பேசினார். ஆனால், இப்போது, அந்தப் பிரச்சினைகள் குறித்து அவர் எதையும் பேசுவதில்லை.
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆதலால், பிரதமர் மோடியின் பேச்சு பொருள் இல்லாதது என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் விவசாய கடன் தள்ளுபடி, போனஸ், விவசாயிகளின் விளை பொருட்களுக்குநல்ல விலை போன்ற வாக்குறுதிகளை அளித்தார். நான் கேட்கிறேன், ஏன் இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படவில்லை?
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தால், எங்களுடைய முதல்வர் நாள்தோறும்18 மணிநேரம் உழைப்பார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உண்டாக்குவார்.
அனைத்து மாநிலங்களிலும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை என்பது கவலை கொள்ளும் பிரச்சினையாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 450 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவில் நாள்தோறும் 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த மாநிலத்தை மிகப்பெரிய வேளாண்மை முனையமாக மாற்றுவோம்.
சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு 2013-ம் ஆண்டு செய்த வியாபம் ஊழலால் மாநிலத்தின் கல்வித்துறையை சீரழித்துவிட்டது. நுழைவுத்தேர்வு, சேர்க்கை, பணியமர்த்துதல், அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.
ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, ரூ.30 ஆயிரம் கோடியை தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோரும்கூட ரஃபேல் ஒப்பந்தத்தில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரி, அதிகாலை 2மணிக்கு நீக்கப்பட்டார். விசாரணை நடந்தால், இருவரின் பெயர் மட்டும்தான் வெளிவரும் ஒன்று பிரதமர் மோடி, மற்றொன்று அனில் அம்பானி.
பிரதமர் மோடி துல்லியத்தாக்குதல் குறித்துப் பேசுகிறார். அந்த துல்லியத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், அம்பானிக்கு விமானம் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய அனுபவம் இல்லை.
அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இருக்கிறது. ஆனால், இதை இன்னும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.