இந்தியா

சஞ்சய் பாரு புத்தகத்துக்கு பதிலளிக்காத சோனியா இப்போது கொந்தளிப்பது ஏன்?- நட்வர் சிங் கேள்வி

செய்திப்பிரிவு

எனது சுயசரிதை சோனியாவை கடுமையாக பாதித்துள்ளது, அதற்கு பதில் தரும் விதமாக அவர் எழுத உள்ள சுயசரிதையை படிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று நட்வர் சிங் கூறினார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியில் இருந்தவருமான நட்வர் சிங், 'ஒன் லைப் இஸ் நாட் இனஃப்' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் கடந்த 2004-ம் ஆண்டு, சோனியா பிரதமர் பதவியை ஏற்காதற்கு சோனியா தெரிவித்த காரணத்தில் உண்மை இல்லை என்றும், "எங்கே தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி போன்று தாயாரும் கொல்லப்பட்டு விடுவாரோ" என்ற பயத்தில் ராகுல் காந்தி தடுத்ததின் பேரில்தான் சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்கவில்லை எனவும் எழுதியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், "நான் என் சுயசரிதையை எழுதுவேன். அப்போது அனைவரும் உண்மையை அறிந்துகொள்ள முடியும். நான் எழுதினால் மட்டுமே, உண்மை வெளிவரும். இதில் நான் தீவிரமாக இருக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நட்வர் சிங், "எனது சுயசரிதை சோனியாவை மிகவும் பாதித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து சஞ்ஜய் பாரு புத்தகம் எழுதிய போது, அமைதியாக இருந்த சோனியா காந்தி, தற்போது உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பது ஏன்? தாம் சுயசரிதை எழுதி, உண்மையை கூறப்போவதாக கூறுகிறார்.

எனது சுயசரிதை அவரை மிகவும் பாதித்துள்ளது. சோனியா எழுதப்போகும் சுயசரிதைக்காக நான் காத்திருக்கிறேன். ஏன் என்றால், சோனியா உண்மையை எழுதப்போவதாக கூறி உள்ளார்" என்றார்.

மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் புலோக் சாட்டர்ஜி, சோனியாவிடம் அரசு கோப்புகளை தந்தது தொடர்பான கேள்விக்கு நட்வர்சிங் பதில் அளிக்கையில், "சோனியாவை சந்தித்து, புலோக் சாட்டர்ஜி அரசு விவகாரங்கள் குறித்து விவரித்து கோப்புகளை அளித்தது முற்றிலும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை காங்கிரஸ் தலைமை மறுத்தால், சோனியாவை சந்தித்து அவருடன் புலோக் தேனீர் அருந்தவா சென்றார்?" என்று கேள்வி எழுப்பினார்.

நட்வர் சிங், தனது 'ஒன் லைப் இஸ் நாட் இனஃப்' சுயசரிதையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 'விஷமானவர்', 'என்றும் சந்தேகத்திற்குரியவர்' . அவர் இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதலே, அதிகாரம் படைத்தவராக விளங்கினார் என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT