இந்தியா

சபரிமலையில் பக்தர்களை கேரள அரசு நடத்தும் விதம் வேதனையளிக்கிறது: அமித் ஷா கண்டனம்

பிடிஐ

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களை கேரள அரசு நடத்தும் விதம் வேதனையளிக்கிறது. சோவியத் யூனியனில் உள்ள குலாப் சித்தரவதை முகாமில் நடத்தியதுபோல் பக்தர்கள் பினராயி விஜயன் அரசால் நடத்தப்படுகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், 10வயது முதல் 50வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்குப் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள், போராட்டங்களும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்து அமைப்புகளும், பாஜகவினரும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் போலீஸார் கடும் கட்டுப்பாடுகளையும், பல்வேறு விதிமுறைகளையும் விதித்து உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் சன்னிதானத்தில் இருந்த பக்தர்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு காங்கிரஸ், பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு ஐயப்ப பக்தர்களை நடத்தும் விதம் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சபரிமலையில் பின்பற்றப்படும் பாரம்பரியங்களைக் காப்பாற்றப் போராடும் ஒவ்வொரு பக்தருக்கும் ஆதரவாக பாஜக இருக்கும். சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களை மோசமாக நடத்தி அவர்களை ஓய்வு எடுக்கவும், இரவு நேரத்தில் தூங்கவும் கழிவுப்பொருட்கள் இருக்கும் இடத்தை போலீஸார் ஒதுக்கியதாக எனக்குத் தகவல்கள் கிடைத்தன.

ஐயப்ப பக்தர்கள் சோவியத் யூனியனில் உள்ள குலாப் சித்ரவதைக் கூடத்தில் நடத்துவதுபோல் நடத்தப்படுகிறார்கள். மக்களின் நம்பிக்கையை நசுக்கும்வகையில் செயல்பட இடதுசாரி அரசை அனுமதிக்கமாட்டோம். சபரிமலை விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் அரசு செயல்படும் விதம் எனக்கு வேதனையளிக்கிறது.

சிறுமிகளையும், வயதான பெண்களையும், வயதானவர்களையும் கேரள போலீஸார் நடத்தும் விதம் கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், தங்குமிடம் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.

 கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன், திருச்சூர் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சபரிமலையைக் காக்கும் மக்களின் இயக்கத்துக்கு எதிராகச் செயல்படவும், அடக்கும் பொருட்டும் பினராயி விஜயன் நினைத்தால் அது தவறாகும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT