பங்கு விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டும் பல நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சட்டவிரோத பங்கு மற்றும் கடன்பத்திர விற்பனை மூலம் ரூ.5000 கோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்க்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது என்று செபி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தவிர 'கூட்டு முதலீட்டுத் திட்டம்' மூலம் சட்டவிரோதமாக முதலீடு திரட்டிய நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கைப் பாய்ந்துள்ளது. இந்த வகையில் சுமார் ரூ.4000 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதன் விவரங்களை அந்த நிறுவனங்கள் உடனடியாக அளிக்க செபி உத்தரவிட்டுள்ளது.
முன்னுரிமைப் பங்கு விற்பனை மூலம் முதலீடு திரட்டிய 7 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட செபி, அந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், புரமோட்டர்கள் ஆகியோர் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி கடன் பத்திரங்கள், முன்னுரிமைப் பங்குகளை வெளியிட்டுள்ளது.
மேலும் கூட்டு முதலீட்டுத் திட்டத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய கொல்கத்தாவைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சாய்பிரசாத் குழுமம் பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டும் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. சாய்பிரசாத் ஃபுட்ஸ், சாய்பிரசாத் ரியல் எஸ்டேட் நிறுவனமும் பங்கு வெளியீடு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நைசர் கிரீன் ஹவுசிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமும் ஜூலை 28ஆம் தேதி செபியால் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 25 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.3000 கோடி முதலீடு திரட்டிய பானகார்டு கிளப் இந்தியா நிறுவனமும் நிதிதிரட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத்தில் செபி, கொல்கத்தாவில் உள்ள பல நிறுவனங்கள், பி.ஏ.எஃப்.எல். இண்டஸ்ட்ரீஸ், சன்பிளாண்ட் ஃபோர்ஜிங்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போதுமக்களிடமிருந்து முதலீடு திரட்ட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபொல் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.716 கோடி திரட்டிய மெகா மோல்ட் நிறுவனத்திற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.