இந்தியா

கேரள சட்டப்பேரவையில் மீண்டும் அமளி

செய்திப்பிரிவு

சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் அமளியில் ஈடுபட்டனர்.

கேரள சட்டப்பேரவை நேற்று கூடியதும், சபரிமலையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக அவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரினார். இதன் தொடர்ச்சியாக, ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸையும் அவர் வழங்கினார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அவைத் தலைவர், கேள்வி நேரம் முடிந்த பின்னர் இதுகுறித்து விவாதிக்கலாம் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் பலமுறை கேட்டுக் கொண்டும் அவர்கள் இருக்கைக்கு திரும்பவில்லை. இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT