இந்தியா

பெண்ணின் படத்தை மார்ஃபிங் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாகப் புகார்; இளைஞரின் தலைமுடியை மழித்த கும்பல்: வைரலாகும் வீடியோ

ஏஎன்ஐ

ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணோடு இருப்பதுபோல தனது படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டதாகக் கூறி அலிகார் அருகே இளைஞரின் தலைமுடியை மழித்து தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இக்லேஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சஹாராகுர்த் கிராமத்தில் இச்சம்பவம் கடந்த நவம்பர் 5-ம் தேதி நடந்தது. வீடியோவில் தலைமுடி மழிக்கப்படும் அந்த இளைஞர் பெயர் வக்கீல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்படும் அளவுக்கு உள்ளூர் மக்கள் அவ்விளைஞரை அடித்துத் துவைத்துள்ளார்கள். அண்மையில் வெளிவந்த இவ்வீடியோவில் வக்கீல் என்ற இளைஞர் கிராமம் முழுவதும் மழிக்கப்பட்ட தலையோடு முகத்தில் கரி பூசப்பட்டு சுற்றிவரும் காட்சி வைரலாகியுள்ளது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வக்கீலின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இவ்வீடியோ பதிவை காவல்துறைக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர் இவ்வழக்கு குறித்து ஒரு விசாரணையை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரபூஷன் தெரிவிக்கையில், ''இந்த வீடியோவில் ஒரு இளைஞர் அடித்து நொறுக்கப்பட்டு சிலர் அவரது தலைமுடியை மழித்துள்ளனர்.இச்சம்பவத்தை நான் கவனத்தில் எடுத்துக்கொண்டு இவ்வீடியோ பதிவை இக்லாஸ் மண்டலத்தின் காவல்துறை ஆய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன். உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்'' என்றார்.

இதற்கிடையில், ஒரு சமூக செயற்பாட்டாளரான இப்ராஹிம் ஹுசைன் இது குறித்து கூறுகையில், ''வக்கீல் ஒரு அப்பாவி. அவரைக் கைது செய்தது தேவையில்லாதது. அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். உண்மையில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமாக தெரிவித்துள்ளேன்.

சில குண்டர்கள் வக்கீலை அவரது வீட்டிலிருந்து இழுத்து வந்துள்ளனர். ஒரு கால்வாய் பகுதிக்கு தள்ளிச்சென்று அவரை கொல்லப் பார்த்துள்ளனர். அந்நேரம் தலையிட்டு அவரது உயிரைக் காப்பற்றிய ஊர் மக்கள் நன்றிக்குரியவர்கள். காவல்துறை, குண்டர்களை தண்டிப்பதற்குப் பதிலாக அவரை (வக்கீல்) சிறையில் அடைத்தது. அந்த குண்டர்கள் சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இன்றும் கூட அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. குற்றம் சாட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட வக்கீல் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கை சிலர் ஹாக்கிங் செய்துள்ளனர். அவர்கள்தான் மார்ஃபிங் செய்த படத்தை வெளியிட்டு வக்கீலின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை அறிந்த போதிலும், உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று ஹுசைன்  தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT