இந்தியா

வெளிநாட்டினர் விரும்பும் நார்த் சென்டினல் தீவு: 44 முறை விதிகளை மீறி செல்ல முயன்றதாக அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

அந்தமான் நிக்கோபாரில் உள்ள நார்த் சென்டினல் உள்ளிட்ட முக்கிய தீவுகளுக்கு  சமீபகாலமாக, விதிமுறையை மீறி 44 முறை வெளிநாட்டினர் செல்ல முயன்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள். அவர்கள்வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சிறப்பு அனுமதி பெற்று அங்கு செல்லும் நடைமுறை முன்பு இருந்தது. இருப்பினும் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்தத் தீவுக்கு போலீஸார், கடற்படையினர் கூட செல்ல அச்சப்படும் சூழலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் சமீபத்தில் அங்கு சென்றார். மீனவர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து விதிமுறையை மீறி நார்த் சென்டினல் தீவுக்கு ஜான் சென்றுள்ளார். ஆனால்,  அவரை பழங்குடி மக்கள் அம்பெய்து கொன்று கடற்கரையில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இறந்த ஜான் ஆலன் கிறிஸ்தவ மிஷனரி எனவும், பைபிளுடன் தீவுக்கு சென்றதாகவும் அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நார்த் சென்டில் தீவுக்கு வெளிநாட்டினர் பலர் விதிமுறையை மீறி சட்டவிரோதமாக அங்கு செல்ல முயன்று வருவது தெரிய வந்துள்ளது. நார்த் சென்டினல் உட்பட முக்கிய தீவுகளுக்கு, சமீபத்தில் 44 முறை வெளிநாட்டினர் செல்ல முயன்றுள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களை பார்க்கவும், அவர்களை தொடர்பு கொள்ளவும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். அதுபோலவே அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினருடன் தொடர்பு கொள்ள அவர்கள் விருப்பமுடன் வருவதாக கூறப்படுகிறது. இதற்காக விதிமுறையை மீறி அவர்கள் சென்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

அந்தமானில் நார்த் சென்டினல் உட்பட மொத்தம் 29 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் சிலவற்றை தவிர மற்ற தீவுகளில் அனுமதி பெற்று செல்லும் நடைமுறை முன்பு இருந்துள்ளது. அனுமதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதால் விதிமுறையை மீறி அங்கு செல்ல வெளிநாட்டினர் முற்படுவதாக உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முறைப்படி அனுமதி பெற்று அந்தமான் தீவுகளுக்கு செல்லும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அந்தமான் தீவுகளுக்கு செல்லும் வெளிநாட்டினர் யார் என்பதை கண்காணிக்க முடியும் என நம்பப்படுகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு பழங்குடியினர் அமைச்சகம் அனுமதி வழங்க வாய்ப்பில்லை. அந்த தீவுக்களுக்கு வெளிநாட்டினரை அனுமதித்தால் பழங்குடியின மக்களியே அச்சம் ஏற்படும் என ஆய்வுக்குழுக்கள் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளன.

SCROLL FOR NEXT