பஞ்சாப் மாநிலத்தில் 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான கையெறி குண்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ராஜாசன்சி கிராமத்தில் உள்ள நிரங்காரி பவன் என்ற வழிபாட்டு தலத்தில் கடந்த 18-ம் தேதி வாராந்திர பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மர்ம நபர்கள் டர்பன் அணிந்திருந்ததும் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்த தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் அமிரிந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக விக்ரம்ஜித் சிங் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு நபரான அவதார் சிங்கை தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் இந்த தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டி உள்ளது. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. இங்கு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம்” என்றார்.