நானும் எனது சுயசரிதையை எழுதுவேன், அதில் பல உண்மைகள் தெரியவரும் என்று நட்வர் சிங்குக்கு சோனியா காந்தி பதிலளித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்பு காங்கிரஸில் இருந்தவருமான நட்வர் சிங் சுயசரிதை எழுதியுள்ளார். அது தொடர்பாக பேட்டியளித்தபோது, சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். முக்கியமாக 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க சோனியா மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
எனினும் அவர் பிரதமராகக் கூடாது என்பதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தார். எனவேதான் சோனியா பதவியேற்கவில்லையே தவிர மனசாட்சி கூறியதால் அவர் பிரதமர் பதவியை மறுக்க வில்லை என்று தெரிவித் திருந்தார்.
இது தொடர்பாக சோனியா காந்தி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எனது சுயசரிதையை எழுதுவேன். அப்போது அதில் உண்மைகளைத் தெரிவிப்பேன். அதன் மூலம் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். ராஜீவ் காந்தி படுகொலை, எனது மாமியார் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற மோசமான சம்பவங்களை எனது வாழ்க்கையில் சந்தித்து விட்டேன்.
எனவே இப்போது இவரைப் போன்றவர்கள் (நட்வர் சிங்) கூறும் குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தாது. இதனால் நான் பாதிக்கப்பட போவதில்லை என்று சோனியா கூறினார்.
நட்வர் சிங்கின் விளம்பர உத்தி
தனது புத்தகத்துக்கு மலிவான விளம்பரம் தேடுவதற்காக நட்வர் சிங் தவறான தகவல்களை கூறி வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் அலுவலக கோப்புகள் ஒப்புதலுக்காக சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்ற நட்வர் சிங்கின் குற்றச்சாட்டையும் மன்மோகன் சிங் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மன்மோகன் கூறியது: தனது பொருளை (சுய சரிதை புத்தகம்) சந்தைப்படுத்து வதற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார். லாபமடைய வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் பேசிய விஷயங்களை பொதுவில் தெரிவிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடக ஆலோசகராக இருந்தவரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்திலும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பிரதமர் அலுவலக கோப்புகள் சோனியாவுக்கு அனுப்பப்பட்டன என்று தெரிவித்திருந்தார்.