இந்தியா

ராஜ்நாத் சிங் கேப்டன், அமித் ஷா ஆட்ட நாயகன்: மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை வர்ணித்த பிரதமர் நரேந்திர மோடி, வெற்றி அணியின் கேப்டன் ராஜ்நாத் சிங், ஆட்ட நாயகன் அமித் ஷா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிந்து பாஜக-வின் முதல் தேசியக் குழுக் கூட்டத்தில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இந்தக் கூட்டத்தில் கூறியிருப்பதாவது:

"ஆட்சிக்கட்டிலில் ஏறி 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது நான் 300 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிவந்தேன், கட்சியின் சகாக்கள் கூட எண்ணிக்கை எதையும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கும் மனநிலையில் இருந்தனர்.

குஜராத்திற்கு வெளியே மோடியை யாருக்குத் தெரியும் என்றனர் எதிர்க்கட்சியினர். ஆனால் மக்கள் பதில் கொடுக்கும் மனநிலையில் இருந்தனர்... கொடுத்தனர்.

மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை திறம்பட செய்துவிட்டனர். இப்போது நாம் நம் கடமையைச் செய்ய வேண்டிய நேரம்.

அயல்நாடுகள் இந்தியா என்றாலே கூட்டணி ஆட்சி என்று நினைத்திருந்தனர். ஆனால் இப்போது நிச்சயமான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிப்போம். முன்னேற்றத்தில் மக்கள் கூட்டாளிகளாகச் செயல்படவேண்டும்.

எந்த ஒரு ஜனநாயக அரசும் வெற்றி பெற மக்கள் பங்கேற்பு அவசியம்.

இந்த தேசியக் குழு கூட்டத்தின் மூலம் நான் மக்களுக்கு கூற விரும்புவது என்னவெனில் இந்த அரசு அதன் நல்ல செயல்பாடுகளை செய்து கொண்டேயிருக்கும். அதன் முடிவுகள் நாட்டின் 125 கோடி மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தீவிரம் காட்டுவது, மசோதாக்களை நிறைவேற்றும்போது அந்தக் கட்சி செய்த இடையூறுகள், ஆகியவை மக்கள் அளித்த தீர்ப்பை அவர்களால் சீரணிக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

எங்களைப் பொறுத்த வரை கட்சியை விட நாடே பெரிது” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

SCROLL FOR NEXT