ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைக் கைப்பற்றி கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் ரூ.9 லட்சம் கோடி இருப்பில் ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை நேர் செய்துகொள்ள கேட்டதாகச் செய்தி வெளியானது. ஆனால், மத்திய பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் அந்தச் செய்தியை மறுத்தார். மத்திய அரசு எந்தவிதமான நிதியையும் ரிசர்வ் வங்கியிடம் கேட்கவில்லை. மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துள்ளது என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே உரசல் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே 19-ம் தேதி (நாளை) நடக்கும் ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டத்தின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமாவை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நாளை நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கியின் வாரியக்குழுக் கூட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவும் சூழலில் நாளை வாரியக்குழு கூட்டத்தில் இருதரப்பினரும் சந்திக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கியையும், அதன் உபரி நிதியையும் கைப்பற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மற்ற கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுவதெல்லாம் தெளிவில்லாமல் இருக்கிறது.
உலகில் எந்த நாட்டிலும் ரிசர்வ் வங்கியை, ஒரு வாரியம் நிர்வகித்தது இல்லை. தனியார் நிறுவனத்தைத் சேர்ந்தவர்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு ஆலோசனை தருவதெல்லாம் அபத்தமானது.
நவம்பர் 19-ம் தேதி என்பது ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டையும், இந்திய பொருளாதாரத்தையும் மதிப்பிடும் நாளாக இருக்கும்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.